பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக முக்கியப் பங்காற்றும் ஆதார் அட்டை, வங்கிச் சேவைகள், அரசு நலத்திட்டங்கள், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பித்தல் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டணம் தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, இந்த வயதுப் பிரிவுக்குட்பட்டோர் ஆதார் விவரங்களை புதுப்பிக்க ரூ.125 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்த கட்டணத் தொகையை மத்திய அரசு தற்போது தள்ளுபடி செய்து, இலவசமாக மாற்றியுள்ளது.

இந்த கட்டண தள்ளுபடி அக்டோபர் 1, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக, இந்திய தனித்துவ அடையாளத் தகவல் ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 6 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த இலவச சேவையால் நேரடியாகப் பயனடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிறந்த பின் பெற்ற ஆதார் அட்டையுடன், குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களது முகம், கைரேகை, கண்கருவிழி போன்ற பயோ-மெட்ரிக் தகவல்கள் மாறுவதால், அவற்றை புதுப்பிக்க வேண்டும். இது அட்டையின் அடையாளத் தன்மையை நிலைநாட்ட முக்கியப் பங்கு வகிக்கிறது. மாற்றப்பட்ட இத்திட்டம் மூலம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மீது செலவுச் சுமை குறையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.