மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவண்டி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த சிறுமி வழக்கம்போல விளையாட வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்காததால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் கடந்த புதன்கிழமை, சிறுமி விளையாட எடுத்து சென்ற வாளி, பக்கத்து வீட்டு வாசலில் கிடந்ததை கவனித்தனர். சந்தேகத்தின் பேரில் பூட்டிக் கிடந்த அந்த வீட்டின் கதவை உடைத்த போலீசார், உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி சாக்குப்பையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கொலை மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வீட்டின் உரிமையாளராக இருந்த 33 வயது வாலிபர், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் என நிரூபிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பீகார் மாநிலம் மதுபனிக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து, அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைதான நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, இதேபோல் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என்பது தெரியவந்தது. விசாரணைக்காக அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது, அவர் போலீஸ் காவலிலிருந்தே தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் இருந்து வந்த சிறுமியை கொன்று விட்டதாக தெரிய வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் கோபம் நிலவுகிறது. மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
