கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், காதல் தகராறைத் தொடர்ந்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில்வசித்து வந்தவர் யசோதா. இவர் திருமணமாகிய பெண். கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக, அதே பகுதியைச் சேர்ந்த ஆடிட்டராக பணியாற்றி வரும் விஸ்வநாத் என்பவருடன் யசோதாவுக்கு நெருக்கம் ஏற்பட்டு, அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றித் திரிந்ததுடன், தொடர்ச்சியான தொடர்பில் இருந்தனர். இந்நிலையில், யசோதா தனது தோழி பிரியங்காவை விஸ்வநாத்திற்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், யசோதாவுக்கு தெரியாமல், விஸ்வநாத்தும், பிரியங்காவும் தொடர்பு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, விஸ்வநாதுக்கும் பிரியங்காவுக்கும் இடையில் நெருக்கம் உருவாகி, கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து சந்தேகமடைந்த யசோதா, விஸ்வநாத்திடம் சண்டையிட்டதோடு, பிரியங்காவிடம் நட்பு கொள்ள வேண்டாம் என எச்சரித்தார்.
இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், விஸ்வநாத்தும் பிரியங்காவும் தங்கியிருப்பதை அறிந்த யசோதா, நேரில் சென்று இருவரிடமும் சண்டையிட்டார். பிரியங்காவிடம் நேரடியாக கேட்டபோதும், சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த யசோதா, இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அருகிலிருந்த மற்றொரு அறைக்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் கிடைத்தவுடன் மாகடி ரோடு போலீசார் விரைந்து வந்து, யசோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக விஸ்வநாத் மற்றும் பிரியங்காவிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
