பெங்களூருபரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் கைதிகள் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து சமீபத்தில் தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அந்த சர்ச்சைகளை மேலும் பலப்படுத்தும் வகையில், தற்போது ஒரு கைதி சிறையில் பெரிய கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ வெளியானதால், மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ‘குப்பாச்சி சீனா’ என அழைக்கப்படும் ஸ்ரீனிவாசா, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறை வளாகத்திலேயே அவர் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by The Times of India (@timesofindia)

வீடியோவில், சக கைதிகள் அவருக்கு ஆப்பிள் மாலை அணிவித்ததும், குப்பாச்சி சீனா பெரிய கத்தியால் கேக் வெட்டியும், பிறகு மற்ற கைதிகளுக்கு ஊட்டியும் மகிழ்வதாக காணப்படுகிறது. இந்த நிகழ்வை, அங்கு இருந்த யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துப் பதிவிட்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சிறை விதிமுறைகளின்படி, கைதிகள் செல்போன் வைத்திருப்பது கடுமையான குற்றமாக இருக்கிறது. எனினும், இப்படியொரு வீடியோ வெளிவந்ததால், சிறைத்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்ட விசாரணையில், இந்த பிறந்த நாள் விழா சுமார் 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்றும், வீடியோவில் உள்ள சில கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பரப்பன அக்ரகாரா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, சிறைக்குள் செல்போன்கள் எப்படி வந்தன, மற்றும் இந்த கொண்டாட்டத்திற்கு யார் யார் உதவினர் என்பதைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம், மாநிலத்தின் சிறை நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.