தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம் செய்யும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய கட்டண விதிமுறைகளை அறிவித்துள்ளது. முன்னதாக, சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறை இருந்தது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை உருவாகி, போக்குவரத்து நெரிசலும், காலதாமதமும் ஏற்பட்டது.

இதனால் அதனைத் தவிர்க்கும் வகையில், ‘பாஸ்டேக்’ (FASTag) என்ற டிஜிட்டல் கட்டண வசதியை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த வசதியால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளை வேகமாக கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பலர் இன்னும் பாஸ்டேக் பயன்படுத்தாமல், பழைய ரொக்க முறையைத் தொடர்கிறார்கள். இதனை நீக்கும் நோக்கத்தில், புதிய கட்டண விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகளின்படி, பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடியில் நுழையும் வாகனங்கள், ரொக்கமாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, யு.பி.ஐ. (UPI) உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினாலும், பாஸ்டேக் இல்லாததால் கால்பங்கு கட்டணத்துடன் கட்டணம் வசூலிக்கப்படும்.

உதாரணமாக: வழக்கமான கட்டணம் ரூ.100 என வைத்தால், ரொக்கமாக செலுத்தினால்: ரூ.200-ம்,  யு.பி.ஐ. வழியாக செலுத்தினால்: ரூ.125-ம் செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறைகள் நவம்பர் 15 முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றம் மூலமாக, பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு நேரமும் பணமும் மிச்சம் ஆகும். குறிப்பாக, வருடாந்திர பாஸ் வைத்திருப்பவர்களுக்கு இது மேலும் வரவேற்கத்தக்க நன்மையாக அமையும். மேலும் பாஸ்டேக் பயன்பாட்டை ஊக்குவித்து, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.