தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திருப்பூர் மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, மாநகர நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “ஒரு திரைப்படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் என்றால், நான்கு படங்களுக்கு ரூ.1000 கோடி கிடைக்கும். ஆனால் அந்த பணம் தேவையில்லை என்று கூறி, மக்களுக்குச் சேவை செய்ய அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய்.
தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய் போன்ற ஒரு தலைவர் இல்லையே என்ற ஏக்கம் மக்களிடையே உள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். மே மாதத்திற்கு பிறகு தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக மாறும். விஜய் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்” என்றார்.
