சமூக வலைதளங்களில் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமே வைரலாவதில்லை; அவ்வப்போது மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்பையும் பறைசாற்றும் சில வீடியோக்களும் மனதைத் தொடுவதுண்டு. அந்த வகையில், மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரைத் தனி ஒரு மனிதனாகச் சீரமைத்த இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு மேம்பாலத்தின் வளைவுப் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் தண்ணீரில் சிக்காமல் இருக்க, சாலையின் ஒரு பக்கமாகவே நெரிசலில் ஊர்ந்து செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், அங்கொட்டு வந்த ஒரு இளைஞர் ‘தேவதூதனைப்’ போலச் களத்தில் இறங்கினார். முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கிய அவர், தனது கால்களால் தேய்த்து தண்ணீர் வெளியேறும் வடிகால் ஜல்லியைத் தேடிப்பிடித்தார். கைகளாலேயே அந்த ஜல்லியில் அடைத்திருந்த குப்பைகளை அகற்றியதும், தேங்கியிருந்த நீர் மளமளவென வெளியேறத் தொடங்கியது.
View this post on Instagram
தண்ணீர் வடிந்ததோடு அவர் தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. சாலையில் படிந்திருந்த சகதியையும் சேற்றையும் மண்வெட்டியைக் கொண்டு அகற்றினார். பின்னர் ஒரு தண்ணீர் லாரியை வரவழைத்து, சாலையைச் சுத்தமாகக் கழுவி, துடைப்பம் கொண்டு தேங்கியிருந்த கடைசிச் சொட்டு நீரையும் அகற்றினார். அவரது இந்தச் செயலால், சில நிமிடங்களில் அந்தச் சாலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, வாகனங்கள் தடையின்றிச் செல்லத் தொடங்கின.
iamhussainmansuri என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான ‘லைக்குகளை’ அள்ளிப் பெற்றுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இவரைப் போன்றவர்களே சமூகத்திற்குத் தேவை” என்றும், “இவர்தான் நிஜமான ஹீரோ” என்றும் பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக நலனுக்காகத் தன்னலமின்றிச் செயல்பட்ட அந்த இளைஞரின் செயல், பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
