கேரள மாநிலம் கொச்சியில் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை நடைபெற்ற மாரத்தான் போட்டியில், தந்தை ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மார்பில் கட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கொச்சியில் இன்று அதிகாலை உடற்தகுதி மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரு நபர் தனது மார்பில் பொருத்தப்பட்ட ‘பேபி கேரியர்’ பையில் தனது பச்சிளம் குழந்தையைச் சுமந்தபடி சீரான வேகத்தில் ஓடினார். வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் கருப்பு நிற டிராக் பேண்ட் அணிந்திருந்த அவர், ஒரு கையில் தண்ணீர் பாட்டிலை வைத்தபடி, மற்றொரு கையால் குழந்தையின் தலை ஆடா வண்ணம் தாங்கிப் பிடித்து ஓடிக்கொண்டிருந்தார். அந்தச் சத்தங்களுக்கு இடையிலும் குழந்தை அவரது மார்பிலேயே உறங்கிக் கொண்டிருந்தது.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அந்தத் தந்தையின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக மாரத்தான் போன்ற நிகழ்வுகளில் தந்தை குழந்தையுடன் பங்கேற்பது நெகிழ்ச்சியான விஷயமாகப் பார்க்கப்பட்டாலும், பச்சிளம் குழந்தையை மார்பில் கட்டிக்கொண்டு ஓடுவது பாதுகாப்பற்றது என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
പിഞ്ച് കുഞ്ഞുമായി മാരത്തോണിൽ പങ്കെടുത്ത് അച്ഛൻ |Nammude Run Marathon Kochi
byu/Rajar98 inKerala
இது தொடர்பாக ரெடிட் (Reddit) தளத்தில் பயனர் ஒருவர் பதிவிடுகையில், “எல்லாக் குழந்தைகளுக்கும் பெற்றோர் தேவை, ஆனால் எல்லா பெற்றோர்களும் குழந்தையைப் பெறத் தகுதியானவர்கள் அல்ல” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றொரு பயனர், “இது உடற்தகுதி என்ற பெயரில் செய்யப்படும் அலட்சியம். ஓட வேண்டும் என்று ஆசை இருந்தால் குழந்தையை ‘ஸ்டோலர்’ வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு சென்றிருக்கலாம் அல்லது வீட்டில் யாரிடமாவது விட்டுவிட்டு வந்திருக்கலாம். குழந்தையின் முதுகெலும்பை அதிர்வு தாங்கியாளாக மாற்றுவது கொடுமை” எனச் சாடியுள்ளார்.
குழந்தையின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் இதுபோன்ற செயல்களை மாரத்தான் அமைப்பாளர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இது ஒரு நெகிழ்ச்சியான தருணமாகத் தொடங்கினாலும், தற்போது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முறையான வளர்ப்பு முறை குறித்த பெரிய விவாதமாக மாறியுள்ளது.
