பெங்களூருவைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், செயலிகள் வழியாகப் பணிபுரியும் தொழிலாளர்களின் துயரமான வாழ்க்கை நிலையைச் சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை கிடைக்காத சூழலில், வாழ்வாதாரத்திற்காக ராபிடோ மற்றும் ஊபர் போன்ற செயலிகளில் தினமும் 16 மணி நேரம் கார் ஓட்டி வருகிறார்.

ஒரு நாளைக்கு 4,000 ரூபாய் வருமானம் கிடைத்தாலும், அதில் கார் வாடகை, எரிபொருள் மற்றும் உணவு என 3,000 ரூபாய்க்கு மேல் செலவாகிவிடுகிறது.

இறுதியில் கையில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே எஞ்சுவதாகவும், பெங்களூரு போன்ற நகரத்தின் செலவுகளுக்கு இது துளியும் போதவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

பணிச்சுமை குறித்துப் பேசியுள்ள அவர், தான் ஒரு கழுதையைப் போல உழைப்பதாகக் கூறியுள்ளார். வாடிக்கையாளர்களின் அழைப்பைச் சில நொடிகளுக்குள் ஏற்க வேண்டிய கட்டாயம், குறையும் ரேட்டிங் குறித்த பயம் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்.

தினமும் 6 மணி நேரம் மட்டுமே உறக்கம், நீண்ட நேரப் பயணத்தால் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி என உடல் ரீதியாகவும் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகும் காரைச் சுத்தம் செய்வது, எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருப்பது எனத் தனக்கெனச் செலவிட ஒரு நிமிடம் கூட நேரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சுமார் 1.2 கோடி பேர் இது போன்ற  வேலைகளில் தகுந்த பாதுகாப்பு இன்றி ஈடுபட்டு வருகின்றனர். “எங்களின் மலிவான உழைப்புதான் மற்றவர்களின் வசதிக்குக் காரணம்” என்ற அவரது பதிவு, விளிம்பு நிலைத் தொழிலாளர்களின் வலியைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

இவருடைய நிலையைப் பார்த்த இணையவாசிகள், உழைக்கும் வர்க்கத்தினருக்குச் சமூகத்தில் உரிய மரியாதையும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.