மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 13 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவனது உடல் கட்டிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்த வாலிபர், போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க அவர்களுடனேயே சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது இந்தூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென மாயமானான். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ரத்தக் கறையும் சந்தேகமும்: சனிக்கிழமை அன்று, ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் ரத்தக் கறையுடன் கூடிய ஜாக்கெட் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்துச் சோதனையிட்டபோது, அங்கிருந்த கட்டிலின் உள்ளே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக ரெஹான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்த பிறகு எவ்வித பதற்றமும் இன்றி, சிறுவனைத் தேடும் பணியில் போலீசாருடன் ரெஹான் சுற்றி வந்துள்ளார். ஆனால், அவரது கையில் இருந்த காயம் போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. லேத் மெஷினில் வேலை செய்யும்போது காயம் ஏற்பட்டதாக அவர் கூறிய நிலையில், அவர் கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை என்பது விசாரணையில் அம்பலமானது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மாஞ்சா நூல் வாங்குவதற்காகச் சிறுவன் அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளான். அப்போது ரெஹான் அவனை மொட்டை மாடிக்கு அழைத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். சிறுவன் சத்தமிட்டதால் பயந்துபோன ரெஹான், செங்கலால் சிறுவனைத் தாக்கி, பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குச் சாதகமாகத் தனது மாமாவையும் அழைத்த ரெஹான், சிறுவனின் சடலத்தைத் தனது வீட்டில் உள்ள கட்டிலுக்குள் மறைத்து வைத்துள்ளார். சந்தேகம் வராமல் இருக்க, அந்தப் பெட்டி போன்ற கட்டிலின் மீது மெத்தையை விரித்து, தனது வயது முதிர்ந்த பாட்டியை அங்கே படுக்க வைத்துள்ளார். போலீசார் சோதனைக்கு வந்தபோது, அந்தப் பாட்டி படுத்திருந்த கட்டிலுக்கு அருகிலேயே ரெஹான் நின்று கொண்டு போலீசாரை திசை திருப்ப முயன்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது ரெஹான் மற்றும் அவருக்கு உதவிய அவரது மாமா ஆகியோரைக் கைது செய்துள்ள போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
