ரயில் பயணத்தின் போது திடீரென உங்கள் அருகில் ஒரு ராஜநாகம் இருந்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறதல்லவா. சமீபத்திய ஆய்வின்படி, காடுகள் அழிக்கப்படுவதாலும் ரயில்வே திட்டங்கள் விரிவடைவதாலும், ராஜநாகங்கள் வழிமாறி ரயில் தண்டவாளங்கள் மற்றும் நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த 22 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்ததில், சுமார் 47 இடங்களில் ராஜநாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பல இடங்கள் ரயில்வே பாதைகளுக்கு மிக அருகிலேயே உள்ளன.
எலிகளைத் துரத்திக் கொண்டோ அல்லது நிழலைத் தேடியோ இந்த பாம்புகள் சரக்கு ரயில்களில் ஏறிவிடுகின்றன. இதனால் அவை ஓரிடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் பயணித்து, தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத புதிய இடங்களுக்குச் சென்றுவிடுகின்றன.
இந்த இடமாற்றம் பாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர ஆபத்தை விளைவிக்கிறது. ராஜநாகங்கள் பொதுவாக அடர்ந்த காடுகளிலும் நீர்நிலைகளிலும் வாழக்கூடியவை; வறண்ட ரயில் தண்டவாளங்கள் அவற்றிற்கு ஏற்ற இடமல்ல.
ரயில் நிலையங்களில் இவை தென்படும்போது பயணிகள் அச்சமடைவதுடன், பாம்புகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. 2017 முதல் 2023 வரை ரயில்களில் இருந்து ராஜநாகங்கள் மீட்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
எனவே, வனத்துறையும் ரயில்வே துறையும் இணைந்து செயல்பட்டு, இந்த வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
