ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள குசடி கிராமத்தில், மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மகேஷி புய்யா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

ஆனால், அவரது மகன்களான ரவீந்திர புய்யா மற்றும் பிரமோத் புய்யா ஆகிய இருவரும், தங்களது தந்தை இறந்ததற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் புய்யா செய்த செய்வினை மற்றும் மாந்தீரிகமே காரணம் என்று தவறாக நம்பினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நள்ளிரவில் விஜய் புய்யாவின் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

இந்த கோரத் தாக்குதலில் விஜய் புய்யா, அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், ஒரு சிறுமி உட்பட இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளான ரவீந்திரா மற்றும் பிரமோத் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.