கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூர் பகுதியில், சொத்துக்காகச் சொந்தப் பெற்றோர்களையும் சகோதரியையும் கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான அக்ஷய் என்ற இளைஞன், தனது தந்தை பீம்ராஜ், தாய் ஜெயலட்சுமி மற்றும் 18 வயது தங்கை அம்ருதா ஆகியோரை கடந்த ஜனவரி 27-ம் தேதி கொலை செய்து, உடல்களை வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளார்.

அதன் பிறகு, பெங்களூருவிற்குச் சென்று தனது குடும்பத்தினரைக் காணவில்லை என்று நாடகமாடி புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வீட்டிற்குள் புதைக்கப்பட்டிருந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு அக்ஷய் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் தனது தங்கை கர்ப்பமாக இருந்ததால் கௌரவக் கொலை செய்ததாக அக்ஷய் பொய் கூறினார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அது பொய் எனத் தெரிந்தது. உண்மையில், அவரது தந்தை சமீபத்தில் வீட்டை விற்றுப் பெற்ற 1.2 கோடி ரூபாய் பணத்தைப் பறிக்கவே இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான அக்ஷய்க்குத் தந்தை பணம் தர மறுத்ததாலும், தங்கையின் பெயரில் இருந்த 50 லட்ச ரூபாய் நிலையான வைப்புத் தொகையை அடைய ஆசைப்பட்டதாலுமே இக்கொடூரத்தைச் செய்துள்ளார். இதற்குத் தூண்டுதலாக இருந்த அவரது மாமா வசந்த் குமாரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.