நடிகர் விஜய் தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், சினிமா உலகில் ஒரு சிறிய அடையாளத்தை உருவாக்க வந்த தனக்கு, ரசிகர்கள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தையே பரிசாக அளித்துள்ளதாக விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கடந்த 33 ஆண்டுகளாகத் தன் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்காக, அடுத்த பல ஆண்டுகளை அர்ப்பணிக்கப் போவதாகவும், அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் அவர்களின் இல்லம் தேடி வந்து துணை நிற்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தனக்காக அனைத்தையும் செய்த ரசிகர்களுக்காக, தான் நேசிக்கும் சினிமாவையே விட்டுக்கொடுக்கத் துணிந்துவிட்டதாகவும், இந்த முடிவை ரசிகர்களுக்கான நன்றிக்கடனாகவே கருதுவதாகவும் அவர் உருக்கமாகப் பேசினார். ​வெற்றிக்கு நண்பர்களை விட ஒரு வலிமையான எதிராளி அவசியம் தேவை என்றும், அப்போதுதான் நாமும் வலிமை பெறுவோம் என்றும் அவர் வாழ்வியல் தத்துவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

தான் தனியாக வருவேனா அல்லது அணியாக வருவேனா என்ற கேள்விக்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களாகிய உங்களுடன்தான் (அணியாக) பயணிக்கிறேன் என்று பதிலளித்தார். இறுதியாக, “2026-ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது” என்று குறிப்பிட்ட அவர், அந்த மாற்றத்தை மக்களுக்காக வரவேற்கத் தயாராக இருக்குமாறு கூறி தனது உரையை அரசியல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்பார்ப்புடன் நிறைவு செய்தார்.