சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்குப் பரபரப்பான சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். “நீங்கள் எனது காதுகளாகச் செல்பவர்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே என்னிடம் சொல்ல வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யாரையும் காப்பாற்றவோ, பழிவாங்கவோ நினைக்கக் கூடாது என்றும், இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
”தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை, அதை அறிக்கையில் வழங்குங்கள்; நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் மருந்து கொடுக்க முடியும்” என்று ஸ்டாலின் ஆவேசமாகப் பேசியுள்ளார். கழகத்தினர் சொல்லும் தகவல்களை ரகசியமாக வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தவறுகளைச் சரிசெய்தால் தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு இயங்க முடியும் என்றார். ஜூன் 5-க்குள் இந்த ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ போன்ற துல்லியமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் இறுதிக்குள் சீர்திருத்த நடவடிக்கைகள் முடிக்கப்படும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
