நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்த்திராத மாபெரும் சரிவைச் சந்தித்து வெறும் 59 இடங்களை மட்டுமே பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக முக்கியமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், தான் போட்டியிட்ட கோட்டையான கொளத்தூர் தொகுதியிலேயே தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தது அக்கட்சியினரை நிலைகுலைய வைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ள சூழலில், இந்த வரலாற்றுத் தோல்விக்கான காரணங்களை ஆராய சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 36 பேர் கொண்ட சிறப்பு கள ஆய்வு குழுவுடன் தீவிரமாக ஆலோசித்து வரும் ஸ்டாலின், நாளை மறுநாள் முதல் தொகுதி வாரியாக நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், தொண்டர்களின் உண்மையான குமுறல்களையும் கருத்துக்களையும் நேரடியாகக் கேட்டறிவதற்காக ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற புதிய பிரத்யேக வலைதளப் பக்கத்தையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.