தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களையும் எளிமையான நடைமுறைகளையும் புகுத்தி வருகிறார். அந்த வகையில், பல தசாப்தங்களாக அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்த முதலமைச்சர் நாற்காலியில் ‘வெள்ளை துண்டு’ விரிக்கும் கலாசாரத்திற்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் இருந்த அந்த வெள்ளை துண்டை அகற்றியதோடு, இனி அத்தகைய மரபு தேவையில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த “டவல் கல்ச்சர்” ஒழிப்பு, தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிகார பந்தா இன்றி செயல்படும் முதலமைச்சர் விஜய், நேர மேலாண்மையிலும் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தினமும் காலை ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகம் வருவதுடன், மதிய உணவையும் வீட்டிலிருந்தே கையில் எடுத்து வந்து சாப்பிடும் அவரது எளிமை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாரைப் பிரமிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் முன்னதாகவே அலுவலகம் வந்துவிடுவதால், அவர் வரும் வழியில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் உயரிய பொறுப்பில் இருந்துகொண்டு இவ்வளவு எளிமையாகச் செயல்படும் முதலமைச்சரின் இத்தகைய நடவடிக்கைகள் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளன.