தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை மற்றும் சண்டைப்பயிற்சிக் கலைஞராக அறியப்படும் நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றக் கோரி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் முத்துக்காளையின் மனைவி மாலதி அவர்களுக்குத் தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து 17 நாட்களாகியும், அவருக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்று உள்ளிட்ட சில பாதிப்புகளால் தற்போது மூச்சுவிடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக முத்துக்காளை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த 17 நாட்களாகத் தனி மனிதனாகப் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது மனைவியின் மேல் சிகிச்சைக்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் சிறப்புப் பரிந்துரை செய்து, அவரது உயிரைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்து, தனது 58-வது வயதில் விடாமுயற்சியுடன் படித்துப் பட்டங்களைப் பெற்றுப் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த முத்துக்காளைக்கு, சமீபகாலமாகத் திரையுலகில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத சூழலில் இந்தத் துயரம் நேர்ந்துள்ளது. இந்த உருக்கமான வேண்டுகோள் தற்போது முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
