பாகிஸ்தானின் கராச்சி நகரில் போதைக்கு அடிமையானவர்களைப் பிடித்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் பணியை ANCC அறக்கட்டளை செய்து வருகிறது. சமீபத்தில் இவர்கள் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியபோது, ஒரு சாக்கடை கால்வாயில் கழுத்து வரை அழுக்கு நீரில் மூழ்கியபடி, முகம் ஒரு துணியால் மூடப்பட்ட நிலையில் ஒருவர் கிடப்பதைக் கண்டனர். முதன்முதலில் அவரைப் பார்த்தபோது அங்கிருந்தவர்கள் அது ஒரு பிணம் என்றுதான் நினைத்தனர். ஆனால், போலீசாரைக் கண்டதும் பிணமாக நடித்த அந்த நபர் எழுந்து வந்ததைப் பார்த்து அனைவரும் உறைந்து போயினர்.



போலீசார் தன்னை பிடித்துச் சென்று விடுவார்களோ என்ற பயத்தில், அந்த நபர் நாற்றமெடுக்கும் சாக்கடைக்குள்ளேயே ஒளிந்து கொண்டுள்ளார். முகத்தில் துணியைப் போர்த்திக் கொண்டால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என அவர் நினைத்துள்ளார். ஆனால், சமூக ஆர்வலர் யூனுஸ் அமீன் மற்றும் போலீசார் அவரைத் துல்லியமாகக் கண்டுபிடித்து மீட்டனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “போதை தலைக்கேறினால் சாக்கடைக்கும் நல்ல தண்ணீருக்கும் வித்தியாசம் தெரியாது போல” என நெட்டிசன்கள் கிண்டலாகவும் வேதனையுடனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.