சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு பெண்கள் கையில் ஆணிகள் பதிக்கப்பட்ட கட்டைகளை வைத்துக் கொண்டு லாரி டிரைவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் (Birbhum) பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளால் தங்கள் கிராமத்தில் தூசி மற்றும் மாசு ஏற்படுவதாகக் கூறி, அதற்குப் பரிகாரமாக இந்தப் பெண்கள் இவ்வாறு சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாகத் தெரிகிறது.



சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோவில், கையில் அபாயகரமான ஆயுதத்தை வைத்துக் கொண்டு பெண்கள் மிரட்டுவது “இது என்ன பகல் கொள்ளையா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு தரப்பினர் கிராம மக்களின் பாதிப்பைக் காரணம் காட்டினாலும், பெரும்பாலான மக்கள் இது அப்பட்டமான மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) என்றும், சட்டத்தைக் கையில் எடுக்கும் இத்தகைய செயல்கள் லாரி ஓட்டுநர்களின் உயிருக்கே ஆபத்தானது என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.