“டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை வெறும் 10 நிமிடம்தான் சந்தித்தார். விஜய் ப்ரோ… பிரதமர் முன்னால் என்ன ஆனது உங்களுடைய சக்தி?” என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசின் மௌனங்களையும், டெல்லி பயணத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல் மர்மங்களையும் அக்குவேறாக ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடி முன்னால் ஏன் எதையும் பேசாமல் அமைதியாக வந்தீர்கள்? வந்து பத்திரிகையாளர்களை ஏன் பார்க்காமல் ஓடினீர்கள்? பத்திரிகையாளர்கள் சமூகத்தின் நான்காவது தூண், அவர்களைச் சந்திக்க விஜய் ஏன் பயப்படுகிறார்? கச்சத்தீவு விவகாரம், பக்ரீத் தீர்ப்பு, மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை போன்ற முக்கியப் பிரச்சினைகளில் தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.
