கரூர் TVK பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த சோக சம்பவம் மிகவும் வருத்தமானது என்று கூறி, இதுபோன்றவை மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்களை நேரில் சந்திக்க கரூருக்கு செல்வதாகவும் அறிவித்துள்ளார். போலீஸ் பாதுகாப்பும் கூட்ட நிர்வாகமும் போதுமானதாக இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் கூறுவது போல், நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறுகிய பாதை மற்றும் நெரிசல் அதிகம் கொண்டது என்று பிரேமலதா சுட்டிக்காட்டினார். போலீசார் தடியடி செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறுகின்றனர் என்றும், விஜயின் பிரச்சாரத்திற்கு பெரிய மைதானம் போன்ற இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தவறுக்கு யார் பொறுப்பு என அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.