கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே மணியார்பாளையம் கீழாத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த கலியனின் மகள் மோனேஸ்வரி (19) என்பவர், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முருகேசனின் மகன் நவீன்குமாரை மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே, குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், நவீன்குமாரின் தாய் ராஜாம்பாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, மரணம் நடந்த காலத்தில் மோனேஸ்வரி வீட்டில் இருந்ததற்காக, “அவள் வந்த நேரம் சரியில்லை” எனக் கூறி, மாமியார் மறைவுக்குப் பிறகும் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மனமுடைந்த மோனேஸ்வரியை, அவரது தந்தை கலியன், சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார். இருப்பினும், இளம்பெண் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று ஈச்சங்காட்டில் உள்ள காட்டுக்கொட்டாயில் மோனேஸ்வரி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மோனேஸ்வரி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கலியன் அளித்த புகாரின் பேரில், கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான மூன்று மாதங்களிலேயே இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது