அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து உலகமே அச்சத்தில் இருக்கும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கென்டக்கி மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரானுடனான போரில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாகப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

“போர் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே எல்லாம் முடிந்துவிட்டது, அமெரிக்கா வெற்றியைத் தன்வசமாக்கிவிட்டது. இப்போது அமெரிக்க ராணுவம் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு, அவர் மேடையிலேயே உற்சாகமாக நடனமாடியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போர் தீவிரமடைந்தது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு, இந்தியா உட்பட பல நாடுகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் போன்ற நாடுகளில் லாக்டவுன் போன்ற சூழல் நிலவுகிறது. இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும், “நாங்கள் எப்போதோ ஜெயித்துவிட்டோம்” என டிரம்ப் கூறியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் நிர்வாகம் தனது படைகளை உடனடியாகத் திரும்பப் பெறாது என்றும் அவர் அந்தப் பொதுக்கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.