வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வரும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானில் இருந்து புறப்படும் ஒரு எண்ணெய் கப்பல் இந்தியாவுக்கு வர எவ்வளவு நேரமாகும் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஈரானில் இருந்து புறப்படும் கப்பல் சுமார் 1,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து முதலில் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைய ஒன்றரை நாட்கள் (37 மணிநேரம்) ஆகிறது.
அங்கிருந்து மும்பைக்கு வர மொத்தம் இரண்டு நாட்களுக்கு மேல் (53 மணிநேரம்) ஆகிறது. ஒருவேளை வானிலை மோசமாக இருந்தால் இந்த நேரம் இன்னும் அதிகரிக்கக்கூடும்.
ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே வெறும் 33 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்ட இந்தச் சிறிய பாதையைத்தான் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தற்போது போர் சூழலால் கடந்த 13 நாட்களில் மட்டும் இந்தியாவின் 36 எண்ணெய் கப்பல்கள் இந்தப் பகுதியில் சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நிறைந்த இந்தப் பகுதியில் இந்தியக் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வர இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை அனுப்பத் தயாராகி வருகிறது.
சர்வதேச கடல்சார் சட்டப்படி இந்தப் பாதையில் கப்பல்கள் பயணிக்க உரிமை இருந்தாலும், பதற்றமான காலங்களில் ஈரான் இந்தப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துவது வழக்கமாக உள்ளது.
இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
