தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகிகளின் உண்மைக்கு மாறான வெற்றுப் பேச்சுகளை நம்பி அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும், அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “அ.தி.மு.க தொண்டர்களில் 90 சதவீதம் பேர் தங்களது கட்சிக்கு வரத் தயாராக இருப்பதாகத் த.வெ.க நிர்வாகிகள் சிலர் ஆதாரமற்ற, அற்பத்தனமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். பண பலத்தையும், அதிகாரப் பதவிகளையும் காட்டி அ.தி.மு.க தொண்டர்களை வளைக்கப் பார்க்கும் இந்த ‘ஆள் பிடிக்கும் வேலை’யை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில், இதற்கான கடுமையான அரசியல் விளைவுகளையும், மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் த.வெ.க சந்திக்க நேரிடும்” என இறுதிக்கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து தனது அறிக்கையில் த.வெ.க-வின் தற்போதைய அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், கடந்த காலத் தேர்தல்களில் தி.மு.க-வுக்கு எதிராக 68.5 சதவீத மக்கள் வாக்கு அளித்துள்ள நிலையில், அதில் வெறும் 34.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டு, தாங்களே ஒட்டுமொத்த மக்கள் ஆதரவைப் பெற்றுவிட்டது போல் த.வெ.கவினர் தம்பட்டம் அடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அ.தி.மு.க என்பது இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட எஃகு கோட்டை என்றும், கட்சியின் சாதாரண அடிமட்டத் தொண்டனைக் கூட யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். எனவே, வார இறுதி நாள்களில் இணைப்பு விழா என்ற பெயரில் த.வெ.க நடத்தி வரும் குதிரை பேர நாடகங்களையும், அ.தி.மு.க தொண்டர்களைக் குறிவைக்கும் தந்திரங்களையும் கைவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
