தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியும், விளவங்கோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விஜயதரணி, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

மேலும் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். காங்கிரஸில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, விளவங்கோடு தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றிய விஜயதரணி, கடந்த 2024-ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து தனது புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

இதனால் விஜயதரணியுடன் இணைந்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் என். பாலகங்கா, ஆர். வனரோஜா, ஏ. இளவரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பா.ஜ.க-வில் தனக்கு தகுந்த அங்கீகாரமும், முக்கிய பொறுப்புகளும் வழங்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியே விஜயதரணியின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தென் தமிழகத்தில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான செல்வாக்கு கொண்ட விஜயதரணியின் இந்த வரவு, தவெக கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.