தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினையைக் கையாள்வதில் தமிழக வெற்றிக் கழக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக திமுக மூத்த தலைவரும், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் மாற்றம் தருவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த டிவிகே, பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவில் 6 முதல் 12 மணி நேரம் வரை கடுமையான மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முதலமைச்சர் விஜய் இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பதாகவும், சமூக வலைதள விளம்பரங்களில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், பகல் நேரத்தில் ஃபியூஸ் கேரியர்கள் திருடப்படுவதால்தான் மின்வெட்டு ஏற்படுகிறது எனக் கூறி சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்து வருவதை செந்தில் பாலாஜி பகடி செய்துள்ளார்.
மேலும் பகலில் நடக்கும் திருட்டு எப்படி இரவில் தொடர் மின்வெட்டை ஏற்படுத்தும் என்ற எளிய கேள்விக்குக் கூட அமைச்சரிடம் பதில் இல்லை என்று கூறிய அவர், மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டுத் தடையற்ற மின்சாரம் வழங்கிய முந்தைய ‘திராவிட மாடல்’ அரசின் நிர்வாகத் திறமையோடு ஒப்பிட்டுப் பேசினார்.
இந்நிலையில் ஹார்ட் டிஸ்க் திருட்டு மற்றும் சதி வேலைகள் போன்ற காரணங்களைக் கூறி, தங்களுடைய நிர்வாகத் தோல்வியைத் திசைதிருப்பும் முயற்சிகளை விடுத்து, மக்களின் துயர் துடைக்கப் போர்க்கால அடிப்படையில் மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
