இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல், தனது ஓய்வு குறித்த முக்கிய கருத்துக்களை சமீபத்தில் ஒரு பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார். கிரிக்கெட்டைத் தாண்டி ஒரு வாழ்க்கை இருப்பதை தான் உணர்ந்துள்ளதாகவும், அதனால் ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுப்பது தமக்கு ஒரு கடினமான விஷயமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் எது என்பது ஒவ்வொரு வீரருக்கும் ஆழ்மனதில் தெரியும் என்றும், அந்தத் தருணம் வரும்போது காலத்தை இழுத்தடிக்காமல் முடிவெடுப்பதே சிறந்தது என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். தற்போது ஓய்வு குறித்த எண்ணங்கள் அவ்வப்போது தனது மனதில் தோன்றினாலும், இன்னும் சில ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தமக்கு வாய்ப்பு இருப்பதாக ராகுல் கருதுகிறார்.

இந்நிலையில் வீரராகத் தமக்குத் தாமே நேர்மையாக இருக்கும் பட்சத்தில், எப்போது விலக வேண்டும் என்ற தெளிவு தானாகவே கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நிதானமான மற்றும் முதிர்ச்சியான அணுகுமுறை சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.