கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேன், 1947-48 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான தொடரின் போது அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பேகி கிரீன்’ தொப்பி, சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 4.2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு எதிராக விளையாடிய போது, இந்தத் தொப்பியை பிராட்மேன் அணிந்திருந்தார்.
அந்தத் தொடரின் முடிவில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு இத்தொப்பியை பிராட்மேன் பரிசாக வழங்கினார். கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக சோஹோனியின் குடும்பத்தினரால் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தத் தொப்பி, தற்போது மிகப்பெரிய விலைக்கு ஏலம் போயுள்ளது.
மேலும் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டான் பிராட்மேன் ஒரு ஈடு இணையற்ற பேட்ஸ்மேனாகக் கருதப்படுகிறார். அவர் விளையாடிய 52 டெஸ்ட் போட்டிகளில் 99.94 என்ற அசாத்தியமான சராசரியுடன் 6,996 ரன்களைக் குவித்துள்ளார். 21 ஆண்டு காலத் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 29 சதங்களை விளாசியுள்ள அவரது சாதனையை இன்றுவரை எந்தவொரு வீரராலும் முறியடிக்க முடியவில்லை.
இத்தகைய பெருமைமிக்க வீரரின் நினைவாகக் கருதப்படும் இந்தத் தொப்பி, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளது.
