அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த வாரம் செய்தியாளர்களிடம், “பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி நாம் உரிய நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அறிவித்திருந்தார்.

ஆனால் இதையடுத்து, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அதனையடுத்து அவர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், செங்கோட்டையன் கூறிய 10 நாட்கள் கெடு நாளையுடன் (செப்.15) முடிவடைய உள்ள நிலையில், அதிமுகவில் அடுத்து என்ன நிகழும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரெயில்வே நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று   செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் என நம்புகிறேன். சசிகலாவை சந்திக்க விரைவில் வாய்ப்பு உள்ளது, சந்திக்கும் முன் உங்களிடம் கூறிவிடுவேன்.

விஜய் உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு ஏற்கனவே சொன்னதைமட்டும் திரும்பச் சொல்கிறேன் – எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்; நல்லதாகத்தான் நடக்கும். டெல்லி செல்லும் திட்டம் இல்லை. நயினார் நாகேந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசினார், சந்திக்க வேண்டுமென்றார்; நிச்சயம் சந்திப்பேன். டிடிவி தினகரன் கூறிய ‘எடப்பாடியை மாற்றினால் NDA-வில் இணைவோம்’ என்ற கருத்து குறித்து, அவரிடம்தான் கேட்கவேண்டும்” என அவர் விளக்கம் அளித்தார். OPS-இன் இந்த பதில்கள், அதிமுகவின் எதிர்கால அரசியல் இயக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.