புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, கடந்த 6-ந்தேதி சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி ஏர்போர்ட் மூர்த்தியும் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை பயன்படுத்தி தாக்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இருவர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்ட நிலையில், மெரினா போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பணியாளர்கள், மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, சென்னை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
