வயது, உடல் சிக்கல்கள், சமூக பார்வை என பல தடைகளை வென்று, தனது உறுதியால் முன்னேறிய ஒரு பெண்ணின் கதையே தற்போது சீனாவில் பெரும் ஊக்கமாகப் பரவி வருகிறது.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் ஜினிங் நகரைச் சேர்ந்த 50 வயதான யாங், தற்போது தென்மேற்கு வனவியல் பல்கலைக்கழகத்தின் (Southwest Forestry University, Kunming, Yunnan) முதுகலை சட்டப் பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளார்.

இதில் சிறப்பு என்னவென்றால், அவரது மகன் முயன்று தோற்ற சட்ட நுழைவுத் தேர்வையே, அவரது பழைய புத்தகங்களைப் பயன்படுத்தி யாங் படித்து வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 1990-களில் ஷாங்காயின் டோங்ஜி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற யாங், வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையில் கடும் சோதனைக்கு ஆளானார்.
கடந்த 2013-ல் நிகழ்ந்த தீ விபத்தில், அவரது முகத்துக்கும், கைகளுக்கும் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. இடது கை முழுவதும் செயலிழந்தது; வலது கையும் பாதி மட்டுமே செயல்பட்டது.

இந்த நிலை, மன அழுத்தம் மற்றும் PTSD எனும் பிந்தைய மன உளைச்சல் சிக்கலை ஏற்படுத்தியது. மக்கள் பார்வை மற்றும் கேலிக்குரிய கருத்துக்களைத் தவிர்க்க, முகமூடி அணிந்து வெளியே செல்லும் நிலைக்கே அவர் தள்ளப்பட்டார். வேலையை விட்டு ஓய்வூதியத்தில் வாழ்க்கையை தொடர்ந்த யாங், தன் மகனை ஒரு வழக்கறிஞராகப் பார்க்க வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்தார். ஆனால் மகன் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தார்.

ஒருநாள் மகனின் பழைய புத்தகங்களை அலமாரியில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது, “இதை விற்க வேண்டாம்; நானே படிக்கலாம்” என்ற எண்ணம் தோன்றியது.
அதையடுத்து, தனது உடல் மற்றும் சவால்களை மீறி, முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தி இறுதியாக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார்.

ஒரு தாயின் பாசமும், பெண்ணொருவளின் போராட்டமும்

இன்று, வயதும், உடல் தளர்வும், கடந்த காயங்களும் யாஙைத் தடுக்க முடியவில்லை. அவரது சாதனை, வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, முயற்சி, மற்றும் குடும்பத்தின் ஆதரவு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கான துல்லியமான எடுத்துக்காட்டாக வைக்கப்படுகிறது.

சீனாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பலரை ஊக்குவிக்கும் வகையில், யாஙின் வீரமிகு வாழ்க்கை பயணம், சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.