சென்னையில் கஞ்சா போதையில் காதலனுடன் சேர்ந்து வாகனங்களை வழிமறித்து ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே புழல் பகுதியில் இதேபோன்று போதையில் தகராறு செய்த அந்த பெண், தற்போது திருவல்லிக்கேணி பகுதியில் மீண்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள பாஸ்ட் புட் கடை ஒன்றிற்கு நேற்று முன்தினம் இரவு அந்த இளம் பெண் தனது காதலனுடன் சாப்பிட வந்துள்ளார். உணவில் காரம் சரியாக இல்லை என்று கூறி கடை ஊழியரிடம் ஆபாசமாகப் பேசித் தகராறு செய்யத் தொடங்கியுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில், சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்துக் கால்களால் உதைத்தும் ஆபாசமாகப் பேசியும் அடியாட்களைப் போல ரகளை செய்துள்ளார். இதைத் தடுக்க வந்த பெண் காவலரையும் ஆபாசமாகப் பேசி அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, உடன் வந்த காதலன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

இதை அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது வைரலானது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ஐஸ்அவுஸ் போலீசார் அந்தப் பெண்ணைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கஞ்சா போதையில் இந்த ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இளம் பெண் என்பதால் அவரது பெற்றோரை வரவழைத்து, இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.