தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உதவியாளரும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்களை விமர்சித்துப் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பொன்ராஜ் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தவெக நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்தப் சர்ச்சை குறித்து பொன்ராஜ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எனது பேச்சால் காயம் பட்ட அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் மீண்டும் சொல்கிறேன், எந்தப் பெண்ணையும் பொதுவாக அவதூறாக நான் பேசவில்லை; அப்படி பேசவும் மாட்டேன். இவ்வாறு அவர் தனது பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

மன்னிப்பு கோரிய அதே வேளையில், தனக்கு வரும் அலைபேசி மிரட்டல்கள் குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார். “தொடர்ந்து அலைபேசி வாயிலாக எனக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முன்னதாக நடிகர் விஜய்க்கு பொண்டாட்டியா இருப்போம்னு சொல்றாங்க தவெக பெண் தொண்டர்கள் விபச்சாரிகள் என்று பொன்ராஜ் பேசிய நிலையில் இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நள்ளிரவில் கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் விஜய் நேரடியாக சென்று புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் பொன்ராஜ் திடீரென மன்னிப்பு கேட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.