சென்னை அண்ணாமலைபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பரங்குன்றம் மலை விளக்கு ஏற்றும் விவகாரம் குறித்து கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: பல கோடி மக்கள் வீடுகளில் இன்று கூட அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர். ஆனால் பா.ஜ.க. திடீரென திருப்பரங்குன்றம் மலைமேல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று முன்வருவதாக சீமான் குற்றம்சாட்டினார். “இவர்கள் இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தார்கள்? இந்த மலையை கல்குவாரியாக மாற்ற உத்தரவு வந்தால் போராட வருவார்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இவ்விவகாரம் தேர்தலை முன்னிட்டு செயற்கையாக எழுப்பப்பட்ட பிரச்சினையென அவர் கூறினார். “தமிழ் சமூகத்துக்குள் பிளவை ஏற்படுத்துவதே பா.ஜ.க.வின் கோட்பாடு. திடீரென விளக்கு ஏற்றுவோம் என்ற கருத்து மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடியது,” என்றார். தமிழக அரசு இதை தடுக்க தவறியதாகவும் சீமான் குற்றஞ்சாட்டினார். “அரசு விரும்பியிருந்தால் இதை முன்பே நிறுத்தியிருக்கும். ராமர் மார்க்கெட் முடிந்ததால் இப்போது முருகனிடம் வருகிறார்கள். தமிழர்களுக்கு வழிபாட்டை பா.ஜ.க. சொல்லிக் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது,” என்றார்.

பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணியைப் பற்றியும் சீமான் விமர்சித்தார். “ஒருபுறம் கூட்டணி வைத்து கொண்டு மறுபுறம் எதிர்த்து பேசுவார்கள் என நினைக்கிறீர்களா? எஜமானர்கள் கோபப்பட மாட்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை குறித்தும் சீமான் விமர்சனம் மேற்கொண்டார். மேலும் “இந்திய மக்களின் ஒற்றுமை பற்றி பேசாமல், இந்து மக்களின் ஒற்றுமை எனப் பேசுவது ஆபத்தானது. அம்பேத்கர் நினைவு தினத்தில் பா.ஜ.க. தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப்படுவது கவலைக்குரியது” என்றார்.