மும்பை மீரா-பயந்தர் பகுதியில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 89 வயது மூதாட்டியின் கையை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 12-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது கையை எலி கடித்துள்ளது.

மறுநாள் காலை உறவினர்கள் பார்க்கச் சென்றபோதுதான் இந்தக் கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. மிகவும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட வேண்டிய ஐசியு வார்டுக்குள் எலிகள் உலவுவதும், அங்கிருந்த மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ இதைக் கவனிக்காமல் இருந்ததும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து உறவினர்கள் புகார் அளித்து நடவடிக்கை கோரிய நிலையில், இன்று மாலை அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு மருத்துவமனையின் மெத்தனமான போக்கே காரணம் எனப் பொதுமக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் சுகாதாரத்திற்காக அரசு கோடிக்கணக்கில் நிதி செலவிட்டாலும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.