தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான அருண் ராஜ், தவெக அரசுக்கு எதிராகப் பல துறைகளில் சதி நடப்பதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அழியா இலங்கை அம்மன் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “மருத்துவத்துறை மட்டுமன்றி பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் திமுக ஆதரவாளர்கள், வேண்டுமென்றே திட்டமிட்டுத் தவெக ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்; இதற்கு எதிராக விரைவில் மிக நல்லதொரு அதிரடி முடிவு எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மேலும், தவெக ஆட்சியில் பதிவுத்துறை போன்ற முக்கிய துறைகளில் லஞ்சம் வாங்குவதும், மதுக்கடைகளில் கூடுதல் பணம் பெறுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அதிமுக-வை சாடிப் பேசிய அருண் ராஜ், “எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதை அவர்களால் ஒருபோதும் மறுக்க முடியாது; இதனால்தான் விரக்தியடைந்த அதிமுகவினர் தற்பொழுது தவெக-வை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்” என்று அதிரடியாகப் போட்டுடைத்துள்ளார். அருண் ராஜின் இந்த அதிரடிப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
