தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படாத காரணத்தால் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, அவர் பா.ஜ.க-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரே வாரத்தில் வெளியாக உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.
அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள பா.ஜ.க தேசிய தலைமை, அவரைச் சமாதானம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், அவருக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் டெல்லி வட்டாரங்கள் பேசி வருகின்றன. எவ்வாறாயினும், அண்ணாமலை சென்னை திரும்பியவுடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினால் மட்டுமே, அவர் தனிக்கட்சி தொடங்குகிறாரா அல்லது பா.ஜ.க-விலேயே நீடிக்கிறாரா என்ற நிஜமான ரகசியம் வெளிவரும் என்பதால் தமிழக அரசியல் களம் தற்பொழுது உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளது.
