சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் ‘ஜென் ஸி’ (Gen Z) இளைஞர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு அதிரடியான பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “திமுக 75 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் அதே எழுச்சியோடு கம்பீரமாக நிற்கிறது என்றால், அதற்கு கட்சியின் கொள்கைகள் மட்டும்தான் மிக முக்கியக் காரணம்” என அவர் மேடையில் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மேலும், “திமுக என்ற பேரைத் கேட்டாலே இங்கு சிலருக்கு எப்போதும் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும்” என்று அவர் பேசிய பேச்சு, அங்கிருந்த இளம் ரத்தங்கள் மத்தியில் பலத்த கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், திமுக கடந்து வந்த நெருக்கடி காலங்களை நினைவுகூர்ந்ததோடு, “மிசாவையே (MISA) நேருக்கு நேர் பார்த்த பாரம்பரியமிக்க இயக்கம் இந்த திமுக” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அதே வேளையில், தற்கால சூழலை மறைமுகமாக சுட்டிக்காட்டிய டி.ஆர்.பி. ராஜா, “சில விஷயங்கள் ரொம்ப சுலபமாகக் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு பலருக்குத் தெரிவதில்லை என்று சொல்வார்கள்; அதுபோலத்தான் இப்போதும் சில விஷயங்கள் நடந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் அமைந்த இவரின் இந்த அரசியல் பேச்சு, இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
