ஆந்திர மாநிலத்தில் கணவனுக்கு விஷம் கலந்த பிரியாணி கொடுத்துக் கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகஜோதி என்ற பெண், தனது கள்ளக்காதலனான முரளியுடன் இணைந்து வாழ்வதற்குத் தடையாக இருந்த கணவன் வீரராகுலுவை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, கணவனுக்குப் பிடித்த பிரியாணியில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். பிரியாணியை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வீரராகுலு உயிரிழந்த நிலையில், முதலில் இது இயற்கையான மரணம் என்று நம்பப்பட்டது. இருப்பினும், வீரராகுலுவின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் உடற்கூறு ஆய்வில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாகஜோதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது காதலன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அற்ப ஆசைக்காகத் தாலி கட்டிய கணவனையே விஷம் வைத்துக் கொன்ற மனைவியின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.