உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில், இரவு நேரத்தில் முகப்பு விளக்குகள் ஏதுமின்றி, வெறும் டார்ச் லைட் வெளிச்சத்தை மட்டும் நம்பி பயணிகளுடன் இயக்கப்பட்ட தனியார் பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருள் சூழ்ந்த சாலையில் முகப்பு விளக்குகள் எரியாத நிலையில், ஓட்டுநர் சிறிய டார்ச் விளக்கின் ஒளியை மட்டுமே வைத்துக்கொண்டு பேருந்தை இயக்கியுள்ளார். அப்பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணித்த நிலையில், எதிர்வரும் வாகனங்களும் பாதசாரிகளும் நூலிழையில் மோதாமல் தப்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கு குறித்துப் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். பாண்டா மாவட்டத்தில் தகுதிச் சான்றிதழ் மற்றும் உரிய அனுமதிப் பத்திரம் இல்லாத பல தனியார் பேருந்துகள் எவ்வித சோதனையுமின்றி தாராளமாக இயக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் பயணிகளின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதாக உள்ளூர்வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து பாண்டா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பலாஷ் பன்சாலின் ஊடகப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வைரலான காணொளியின் அடிப்படையில் போக்குவரத்துப் காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்ததும், பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து விதியை மீறி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் அதன் உரிமையாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
