ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ஒருவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல், உயிர் பிரியும் கடைசி நொடியில் 35 கல்லூரி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
அரக்கோணம் அடுத்த ஜம்புகுளம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்றின் பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர், வழக்கம் போல் மாணவிகளை ஏற்றி வந்துகொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
ஒரு கணம் செய்வதறியாது தவித்த நிலையிலும், நிலைதடுமாறிய பேருந்தின் வேகத்தைக் குறைத்து, சாமர்த்தியமாகச் சாலையின் ஓரத்தில் பத்திரமாக நிறுத்திவிட்டு, அவர் துயரமான முறையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அந்தப் பேருந்தில் பயணித்த மாணவிகள் மட்டுமின்றி, அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும், அதே சமயம் மனிதநேயத்தின் உச்சமாகக் கல்லூரி மாணவிகளின் உயிரைக் காத்த அந்த ஓட்டுநரின் தியாகத்தை எண்ணிப் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
