இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் பெயர் எடுத்த இந்தூரில், சமீபத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகியதால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சுகாதாரச் சீர்கேடு குறித்து மத்திய பிரதேச மந்திரி கைலாஷ் விஜயவர்கியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆத்திரமடைந்த அவர், “பயனற்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்” எனக் கூறியதுடன், இந்தியில் ‘குப்பை’ அல்லது ‘ஒன்றுமில்லை’ எனப் பொருள்படும் ‘கண்டா’ (Ghanta) என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தினார்.

மந்திரியின் இந்த அலட்சியமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த மந்திரி, “எனது தொகுதியில் மக்கள் உயிரிழந்த துயரத்திலும், தூக்கமில்லாத மன உளைச்சலிலும் இருந்ததால் தவறுதலாக அந்த வார்த்தை வந்துவிட்டது” எனக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

இருப்பினும், “மக்களின் உயிரிழப்பை ஒரு பொருட்டாக மதிக்காமல் மந்திரி பேசியது கண்டிக்கத்தக்கது; அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.