தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என்று குறிப்பிட்ட அவர், விஜய்யின் பிரச்சாரத்தை முடக்கப் பல முயற்சிகள் நடந்ததாகவும், அவர் மீது கடும் அவதூறுகள் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், அத்தனையையும் மீறி எவ்வித பண பலமும் இன்றி, நேர்மையான முறையில் இந்த வெற்றியை மக்கள் விஜய்க்கு வழங்கியுள்ளனர் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், இந்தத் தேர்தல் சாதி மற்றும் மத அரசியலைத் தமிழக மக்கள் தூக்கி எறிந்துவிட்டதை உறுதி செய்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். “தமிழகத்தில் மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள் இது; இனி அமையப்போகும் புதிய ஆட்சி இளைஞர்கள் மற்றும் மக்களுக்கானதாக இருக்கும்” என்று அவர் ஆவேசமாகப் பேசினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றும், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
