தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பல ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. மன்னார்குடி தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ். காமராஜ் 68,416 வாக்குகள் பெற்று, திமுகவின் முக்கிய முகமும் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜாவை 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்தத் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் ராஜராஜன் 44,266 வாக்குகளைப் பெற்று திமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நீலகிரி மாவட்டம் உதகை (உதகமண்டலம்) தொகுதியில் பாஜக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பாஜக வேட்பாளர் போஜராஜன் 48,488 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் இப்ராஹிம் 47,512 வாக்குகள் பெற்று, வெறும் 976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார். 33 இடங்களில் போட்டியிட்ட பாஜக-வுக்கு இந்த ஒரு வெற்றி மிகப்பெரிய ஆறுதலாகக் கருதப்படுகிறது. அதேசமயம் அதிமுக கூட்டணி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
