“உருவமும் நிறமும் திருமணத்திற்குத் தடையல்ல; ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடி எங்கோ ஓரிடத்தில் நிச்சயம் இருக்கும்” என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான திருமணம் நடைபெற்றுள்ளது.

ஹரியானா மாநிலம்  சந்தானா கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (26). இவரது உயரம் வெறும் 3 அடி மட்டுமே. விக்ரமிற்கு ஆரம்பத்தில் பல திருமண வரன்கள் வந்தன. இருப்பினும், தனது மூத்த சகோதரர்களுக்குத் திருமணம் முடித்த பின்னரே தான் மணம் முடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்த விக்ரம், வந்த வரன்களை எல்லாம் மறுத்துவிட்டார். சகோதரர்களின் திருமணத்திற்குப் பிறகு, விக்ரமிற்கு வரன்கள் அமைவதில் சிக்கல் ஏற்பட்டது. உயரம் குறைவாக இருப்பதால் பலர் இவரை ‘குள்ளமானவர்’ என்று கிண்டல் செய்தும் வந்தனர்.

தன்னம்பிக்கை தளராத விக்ரமிற்கு, ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (25) என்ற பெண் வரனாக அமைந்தார். ஆச்சரியப்படும் விதமாக பிரியங்காவின் உயரமும் 3 அடி தான். இவர்களது திருமணம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஹாட் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மணமகன் விக்ரம் புல்லட் பைக்கில் அமர்ந்து, உற்சாகமாக நடனமாடியபடி ஊர்வலமாக வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.

திருமணம் முடிந்து புதுத்தம்பதிகள் சந்தானா கிராமத்திற்குத் திரும்பியபோது, ஒட்டுமொத்த கிராமமே திரண்டு வந்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தது. 3 அடி உயரமே கொண்ட இந்த ‘பவர் கப்பிள்’ உடன் கிராம மக்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இது குறித்து மணமகன் விக்ரம் கூறுகையில், “மக்கள் என்னை கிண்டல் செய்தாலும், அதை நான் அவர்களின் அன்பாகவே பார்க்கிறேன். முதலில் சகோதரர்களின் கடமையை முடித்தேன், இப்போது கடவுளின் ஆசியால் எனக்கேற்ற துணை கிடைத்துவிட்டது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உடல் தோற்றத்தைக் கண்டு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கு, விக்ரம் – பிரியங்கா ஜோடியின் இந்தத் திருமணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. தற்போது இந்தத் தம்பதியினருக்குச் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.