ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் மருமகளின் உடை மற்றும் நவீன கலாச்சாரம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாமனார் மற்றும் மாமியார் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானிபட்டைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் சுமன் தம்பதிக்கு ஆசிஷ் என்ற ஒரே மகன் உள்ளார். ஆசிஷ் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் டெல்லியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணுடன் பழகி, பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டார்.

டெல்லியின் நவீன சூழலில் வளர்ந்த சினேகா, கிராமத்தின் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சினேகா அணியும் உடைகள் தொடர்பாக மாமனார் மற்றும் மாமியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தனது சுதந்திரத்தில் தலையிடுவதாக சினேகா கருதியதால், குடும்பத்தில் தினசரி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

 

சம்பவத்தன்று மீண்டும் உடை விவகாரத்தில் தகராறு முற்றியுள்ளது. அப்போது மருமகள் சினேகா, மாமியார் சுமனைத் தாக்கியதாகவும், இதனால் ராஜேஷ் மற்றும் சுமன் இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த தம்பதியினர் விஷம் அருந்தினர்.

உடல்நிலை மோசமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமன் முதலில் உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்காக மேல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ராஜேஷும் மறுநாள் காலை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய குடும்பப் பிரச்சினை இரு உயிர்களைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.