பாதானம்திட்டா மாவட்டம் நரணமூழி பகுதியை சேர்ந்த வி.டி. ஷிஜோ (46) என்பவர், கடந்த 13 ஆண்டுகளாக சம்பளமின்றி பணி செய்த மனைவியின் நிலைமையை கண்டு மனவேதனைக்குள்ளாகி, தனது வீடு அருகே உள்ள காடுப்பகுதியில் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிஜோவின் மனைவி லேகா ரவீந்திரன், நரணமூழி செயிண்ட் ஜோசப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆனால், 13 ஆண்டுகளாக சம்பளமின்றி பணியாற்றி வருவதால் குடும்பத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது.

இவரது சம்பளத்தை அனுமதிக்க உச்சநீதிமன்றம் கூட வழிகாட்டும் உத்தரவை பிறப்பித்தது. ஆனால், பாதானம்திட்டா மாவட்டக் கல்வி அலுவலகம் அந்த உத்தரவை புறக்கணித்து சம்பள ஆவணங்களை சரிசெய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்காக அந்த குடும்பம் பலமுறை கல்வித் துறை அமைச்சரிடம் முறையிட்டிருந்தது. அமைச்சரின் அலுவலகம் சம்பளத்தை வழங்க ஆவணங்கள் சரி செய்ய உத்தரவிட்டதையும் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருந்த ஷிஜோ, மனைவியின் சம்பளத்தில் வரும் தொகையை தன் மகன் வைஷ்ணவின் இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கைக்காக பயன்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் பணம் கிடைக்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

இவரும் வேளாண் துறையின் கீழ் இயங்கும் VFPCK நிறுவனத்தில் தற்காலிக புல உதவியாளராக பணியாற்றியவர். அவருக்கும் சில மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் இருந்தது. சம்பவம் நடந்த நாளில் மட்டுமே 15 நாள் சம்பளம் மட்டுமே வங்கிக் கணக்கில் வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி, ஷிஜோவின் தந்தை தியாகராஜனுடன் தொலைபேசியில் பேசினார். அவர், “சம்பள நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் என்பது தீவிர அலட்சியம். இத்தகைய துயரங்கள் மீண்டும் நடைபெறாமல் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

ஷிஜோவின் குடும்பம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது. இறுதி சடங்கு புதன்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. ஒரு சாதாரண அரசு ஆசிரியையின் உரிமையான சம்பளத்தை வழங்கத் தவறிய கல்வித்துறை, ஒரு குடும்பத்தை துவம்சமாக்கியுள்ளது என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டு வருகிறது.