உத்தரபிரதேசம், நொய்டா நகரில் ஹூண்டாய் ஆறா (Hyundai Aura) சிஎன்ஜி கார் உள்ளே இருந்து பூட்டப்பட்ட நிலையில் இரு ஆண்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அந்த நேரத்தில் கார் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. சுவிட்ச் இயக்க நிலையில் இருந்தாலும், பெட்ரோலும் CNG-யும் இரண்டும் வெறுமையாக இருந்தது என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சச்சின் ஷர்மா (27) மற்றும் லக்ஷ்மி குமார் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சச்சின் ஒரு டாக்சி ஓட்டுநராகவும், லக்ஷ்மி குமார் தினசரி கூலி தொழிலாளராகவும் இருந்தார். இருவரும் காசியாபாத்தில் உள்ள கோரா காலனி, ப்ரேம் விகார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களின் குடும்பத்தினர், அவர்கள் ஞாயிறு இரவிலிருந்து காணவில்லை என கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர்.அதன் அடிப்படையில் போலீசார் தேடிய நிலையில், அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

செக்டர் 58 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமித் குமார் கூறியதாவது: “இவர்கள் இருவரும் ஞாயிறு இரவு மதுபானம் அருந்தியிருப்பதற்கான சந்தேகங்கள் உள்ளன. அதன் பிறகு காரில் உறங்க முயற்சி செய்திருக்கலாம்.

ஆனால் காரில் எரிபொருள் இல்லாததால் காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத்திணறலால் உயிரிழந்திருக்கலாம். இது ஆரம்பக் கணிப்பே. உண்மையான காரணம் பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் உள்ள சிசிடிவி காட்சி, வாட்ஸ்அப், மெசேஜ், மற்றும் அவர்களது இறுதியாக பேசப்பட்ட தொலைபேசி விவரங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த மரணம் தற்கொலைவா? அல்லது விபத்தா? என்பது குறித்து முழுமையான தகவல் கிடைக்கும் வரை, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.